ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது...

ஈழத்தமிழினம் என்றைக்கும் ஒரு இனமாக அல்லது ஒரு சமூகமாக ஒற்றுமையாக ஒரே கொள்கையுடன் - ஒரே குறிக்கோளுடன் சிந்தித்ததும் கிடையாது ஓரணியாக பயணித்ததும் கிடையாது என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகளும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அது இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. ஈழத்தமிழரின் அகிம்சை போராட்டங்களாக இருக்கட்டும் ஆயுத போராட்டமாக இருக்கட்டும் அனைத்து போராட்டங்களும் நலிவடைந்து போனதற்கு மேற்கூறிய இனத்தின் குணாதிசயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. ஆனாலும் இத்தனை படிப்பினைகளை கற்றபின்னரும் ஒரு இனம் மீண்டும் மீண்டும் அந்த தவறுகளை செய்துகொண்டிருப்பது என்பது அந்த இனத்தின் மிகப்பெரும் சாபக்கேடாகும். இனத்தின் விடுதலைக்காக - மண்ணை மீட்பதற்காக இலட்ச்சக்கணக்கானவர்களை தியாகம் செய்திருக்கும் ஒரு இனம் மிகப்பெரும் படிப்பினைகளுடன் தன்னுடைய எதிர்கால பயணத்தை திட்டமிட்டு நகர்த்தவேண்டிய ஒரு காலகட்டத்தில் இனத்தை பிரித்துக்கொண்டு -அவர்களுடைய இன உணர்வை மிதித்துக்கொண்டு - கடந்தகால வரலாறுகளை மறைத்துக்கொண்டு ஒரு சில தரப்புகள் தமிழரின் விடுதலை தாக சுடருக்கு எதிராக செயற்படுவதை எந்தவொரு ஈழத்தமிழனாலும் பொறுத்துக் கொள்ளமுடியாது.

ஈழத்தமிழரில் ஒரு தரப்பினர் இனத்தின் விடிவுக்காகவும் சிங்கள பேரினவாதம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனித பேரவலத்தை நிரூபித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை கடந்த 14 வருடங்களாக முன்னெடுத்துவரும் நிலையில், ஒரு சில அமைப்புகள் மற்றும் நபர்கள் சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து ஈழத்தமிழரின் போராட்டத்தை - ஈழத்தமிழரின் கனவை சிதைக்கும் வகையில் செயற்படுவது என்பது மிகப்பெரும் இழிவான செயலாகும்.ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்ற பின்னர் ரணிலின் நரித்தனம் ஈழத்தமிழர்களை பிரித்தாளும் நிலைமையை முன்னரை விட வேகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ரணிலின் வருகைக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி பிரிந்தது. அதேபோல், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் பலர் ஸ்ரீலங்காவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான முதலீட்டுக்கான வாய்ப்பை வழங்குவது போன்ற மாயை ஒன்றை உருவாக்கி புலம்பெயர் நாடுகளில் உள்ள வசதிபடைத்த ஈழத்தமிழர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், புலம்பெயர் தமிழர்களை (ஒரு சிலரை) நாட்டுக்குள் வரவழைத்து பௌத்த துறவிகளுடன் உறவாட விட்டதன் விளைவாக இன்று இனவாத பௌத்த துறவிகள் பெரும் கோபத்தில் இருப்பதை அவதானிக்க முடிவதுடன், பௌத்த துறவிகளும் இரு துருவங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ரணிலின் பெரும் இராஜதந்திர நரித்தனத்தின் உச்சம் என்று கூட கூறமுடியும்.

சிங்கள பேரினவாதத்தின் ஒட்டுண்ணிகளாக இருக்கும் தமிழ் தரப்புகள் ஆகக்குறைந்தது இன்று தமிழர் தேசத்தில் நடக்கின்ற அநீதிகளையாவது நிறுத்துவதற்கு முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. 2024 ஆம் ஆண்டுக்கான - செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பிற்காக பெருந்தொகை பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் இராணுவ வலயமாக வைத்துக்கொண்டு மக்களுடைய சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் ஸ்ரீலங்காவின் பேரினவாதிகளை பின்வாங்க செய்வதற்கு இந்த ஒட்டுண்ணிகளால் முடிந்ததா? இல்லை, உறவுகளை நினைவுகூருவதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் போர்குற்றவாளிகளை பின்வாங்க செய்ய முடிந்ததா? இல்லை, முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து 14 வருடங்கள் கடந்தும் இன்னும் மீள்குடியேற முடியாமல் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக வாழும் மக்களை அவர்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிந்ததா? இல்லை, போரில் அவயங்களை இழந்து வாழ்வாதாரத்துக்காக கையேந்திக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு ஒரு நியாயமான நீதியையோ அல்லது உதவியோ மேற்படி தரப்புகளால் செய்ய முடிந்ததா? இவை எதுவும் நடக்கவில்லை.

மாறாக, சிங்கள பேரினவாதத்தை சர்வதேச சமூகத்தின் மத்தியில் பலப்படுத்தும்- காப்பாற்றும் வகையிலும் சிங்கள தேரர்களையும் இனவாதிகளையும் செல்வந்தர்களாக ஆக்கும் நடவடிக்கைகளையே இந்த தரப்புகள் செய்துகொண்டிருக்கின்றன. இது தமிழினத்துக்கு செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஈழத்தமிழர்கள் விழிப்பாக இருப்பது அவசியம். குறிப்பாக இந்த தரப்புகளுக்கு பின்னால் இயங்கக்கூடிய தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சி தலைமைகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம். ஈழத்தமிழரின் கனவையும்-சுமைகளையும் எங்கோ இருந்துவரும் ஒரு சிலர் சிதைத்துவிட்டு செல்வதற்கு இடம் கொடுக்கமுடியாது. ஈழமண்ணில் இருந்துகொண்டு அனைத்து துன்பங்களையும் அனுபவித்த மக்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும். அவர்கள் தான் தங்களுக்கான தீர்வு அல்லது நீதி  எவ்வாறு அமையவேண்டுமென்பதை தீர்மானிக்கும் சக்திகளாகும். ஆகவே, ஈழத்தமிழரின் வலிகளுக்கு ஒத்தணம் கொடுக்க வேண்டுமாகவிருந்தால் அது தமிழீழம் மலர்வதில் மாத்திரமே தங்கியிருக்கிறது. அது இன்றைக்கு நிகழும் சூழல் இல்லாவிட்டாலும் அதற்கான சூழலை உருவாக்கும் தாற்பரியம் அனைத்து தமிழ் தரப்புகளுக்குமுரியது.அந்த சூழலை ஏற்படுத்துவதற்காகவே பல்வேறு தரப்புகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகெங்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அந்த உழைப்பை வீணாக்குவதோ அல்லது தாயக மண்ணில் விதையாகியிருக்கும் எமது மாவீரர்களின் கனவுகளை-தியாகங்களின் வரலாற்றை மாற்றி எழுத நினைக்கும் எந்த தரப்பையும் தமிழ் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்பதை கூறிவைக்கின்றோம்.

Bootstrap