இலங்கை - இந்திய தேர்தலும் தமிழ் தேசியமும்

தேர்தல் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு விடியப் போகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 2024 தேர்தல் நடக்கவிருப்பது திட்டவட்டமானது.

நடக்கவிருக்கும் இந்த மூன்று நாடுகளின் தேர்தல்களிலும் அமெரிக்காவின் தேர்தல் ஆனது இலங்கையிலோ அல்லது ஈழத் தமிழர்களின் அரசியலிலோ எத்தகைய தாக்கத்தையும் செலுத்த மாட்டாது.

ஆனால் இந்தியாவின் தேர்தல் என்பது இலங்கைத் தேர்தலில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. ஈழத் தமிழர்களின் அரசியலிலும் அதன் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியது.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் நிகழ்ச்சி நிழலின்படி 2024ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க வேண்டும்.

எனவே இன்று ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் தனது முழுமையான காலத்தை நிறைவு செய்து தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

எது எப்படி இருப்பினும் மே மாதத்திற்கு முன்னதாக இந்தியாவில் தேர்தல் நடப்பது உறுதியானது. அதேநேரம் இலங்கையில் தேர்தல் ஆணைய நிகழ்ச்சி நிழலின்படி ஜனாதிபதி தேர்தல் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறே நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்திற்கு முன் நடத்தப்பட வேண்டும். எனவே இலங்கை இரண்டு தேர்தல்களை எதிர்கொள்ளும் ஆண்டாக 2024ம் ஆண்டு விளங்கப் போகிறது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை எந்த நேரமும் கலைக்கும் அதிகாரம் கொண்டவர் என்ற அடிப்படையில் இலங்கையின் தேர்தல் இரண்டையும் எப்போதும் நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

எனவே அவர் தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு தனக்கு சாதகமான ஒரு சூழ்நிலையில் இரண்டு தேர்தல்களையும் நடத்த முடியும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த அளவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் நாள் நடந்து முடிந்து விட்டது.

மாவீரர்நாள் போலித் துவாரகா வருகை ஒரு சதிகார வேலை என்றும் ஈழத் தமிழரின் அறிவியலுக்கும் தேசியத்திற்கும் அவமானகரமானது என்ற கருத்தியல் ஈழத் தமிழர் அறிவார்ந்த மட்டத்தில் எழுந்தது.

இதன் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் பொதுப்புத்தியில் இதனை எதிர்த்து பலமான குரல்கள் எழுந்திருப்பதும் பெரும்பான்மையான மக்கள் போலி என்பதனை உறுதிப்படுத்தி நிராகரித்தமையினால் போலித் துவாரகாவினால் ஏற்படுத்தப்பட்ட சலசலப்புகள் ஒரு வாரத்துக்குள்ளேயே ஓய்ந்து விட்டது.

இது மாத்திரமல்ல ஆயுத போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்பின் போது நடந்த பல விடயங்களுக்கு விடைகாணப்படாமல் தொக்கு நின்ற பல விடயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் அமைந்துவிட்டது.

எனவே அடுத்ததாக இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அதனை எவ்வாறு ஈழத் தமிழினம் எதிர்கொள்வது என்பது பற்றியும்தான் ஈழத் தமிழர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இப்பின்னணியில் எதிர்வரும் இலங்கை தேர்தல் இரண்டிலும் தமிழ்த் தலைமைகளும், தமிழ்த்தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும், தமிழ்மக்களும், புத்திஜீவிகளும், அறிஞர்களும், கலைஞர்களும், தமிழ் ஊடகத்துறையினரும், தமிழ்த்தேசிய விரும்பிகளும் முன்யோசனையுடன் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும், புத்திபூர்வமாகவும் செயற்படவேண்டிய காலச்சூழல் தோன்றியிருக்கிறது.

இலங்கை அரசை பொறுத்தளவில் அதன் வெளியுறவு கொள்கை என்பது அண்டை நாடான இந்தியாவை கையாள்வதிற்தான் பெருமளவு தங்கிநிற்கிறது.

அதுவே அது எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சனையாகும். இந்தியாவை கையாள்வதற்கு அது மேற்குலகையும் சீனாவையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

எனவே இலங்கை அரசின் வெளிநாட்டு கையாளுகை என்பது இந்தியாவை மையப்படுத்தி மேற்குலகையும் சீனாவையும் தனது இருபக்க அரணாக கொண்டு இந்தியா என்னும் அச்சில் சுழல்கிறது.

இந்த வகையில் இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தல் மேற்குலகம், இந்தியா, சீனா என்கின்ற முக்கோண கண்ணோட்டத்தைக் கொண்டதாக அமையும்.

இந்த மூன்று சக்திகளும் இலங்கை தேர்தலில் திட்டவட்டமான பங்கையும் பாத்திரத்தையும் வகிப்பர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க விரும்புவது இந்தியாவைப் பற்றித்தான்.

ஏனெனில் அரசுகளுக்கிடையான உறவு என்ற அடிப்படையில் ரணில் இந்தியாவுடன் உறவைப் பேணினாலும் அவர் இந்தியாவை நம்பவில்லை. அவ்வாறு இந்தியாவும் ரணிலை நம்பத் தயாரில்லை.

இந்தியாவை காலைவருவதில் ரணில் அக்கறையாகவுள்ளார். ரணில் தமக்கு பாதகமாக உள்ளார் என்பதில் இந்தியா கவனமாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வகையில்தான் ராணிலின் இலங்கை தேர்தல் வியூகம் அமைக்கப்படும்.

இன்நிலையில் இலங்கைத் தேர்தலில் இந்திய புலனாய் துறையின் செல்வாக்கும் வாகிபாகமும் அமையும் என்ற கண்ணோட்டமும் எதிர்பார்ப்பும் ரணிலுக்கு இருப்பதனால் ஏறக்குறைய இந்தியாவின் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்திய அரசை கையாளும் காபந்து அரசாங்கம் அமையப்பெறும் காலத்தில் இலங்கை விடயத்தில் இந்தியாவோ அல்லது அதன் புலனாய்வுத் துறையோ பெருமளவு கவனம் செலுத்த. வாய்ப்பில்லை.

அவர்கள் இந்தியாவின் உள் விவகாரங்களையே பெரிதும் கருத்தில் கொண்டு செயல்படும் காலமாகவும் அது அமையும்.

இந்திய புலனாய்வுத் துறையோ அல்லது இந்திய அதிகாரபீடமோ இலங்கை மீது கடினமான முடிவுகளை எடுக்க முடியாத, பெரிய தீர்மானங்களை எடுத்து நெறிப்படுத்த முடியாத, பெரிதும் கவனம் செலுத்த முடியாத, அந்த காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் இந்திய புலனாய்வுத் துறையின் செயற்பாடுகள் மந்தகரியில் செயற்படக்கூடிய காலமான காபந்து அரசாங்கம் நிர்வாகிக்கும் காலப்பகுதியையே ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விரும்புவார்.

அதுவே இலங்கை ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் சுமூகமானதாகவும் அமையும். எனவே இந்திய தேர்தல் காலப் பகுதியான ஏப்ரல்-மே காலப்பகுதிக்குள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.

அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் பெறக்கூடிய வெற்றியின் அளவினை கருத்திக்கொண்டே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வியூகத்தை ரணிலினால் வகுக்க முடியும்.

பெரும் வெற்றி பெற்றால் ரணில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார். அரும்பொட்டாக வெற்றியைப் பெற்றால் பெரும்பாலும் மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பு (சுநகநசநனெரஅ) ஒன்றை நடத்துவதற்கான முடிவையே ரணில் எடுப்பார் என துணிந்து சொல்ல முடியும். எனினும் இம்முடிக்கு மேற்குலகத்தின் விருப்பத்தினையும் ரணில் அனுசரித்து நடப்பார் என்பதும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மேற்குலகத்தை தனது விருப்புக்கு வளைக்கக்கூடிய வல்லமை ரணிலின் ராஜதந்திரத்திற்கு உண்டு. அத்தோடு ஜனாதிபதி தேர்தலை நாடாளுமன்றத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பாகவும் இணைத்து பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் கடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதனை ரணில் காணப்படும் சூழலில் தனக்கு எது சாதகமோ அதனை நிச்சயம் பயன்படுத்துவார்.

இப்போது இருக்கின்ற இலங்கையின் பொருளாதார நிலைமையும், மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற ஆதரவுத் தளத்தின் நிலையும் மோசமாக இருப்பதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்துவது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பமானதாகவும் சாதகமானதாகவும் அமையும்.

இச்சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மேற்குறிப்பிட்ட மக்கள் கருத்து கணிப்பு வாக்கெடுப்பிற்கு நிச்சயமாக பதவியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் பெருவெற்றி பெற்றால் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்துவதில் அவருக்கு எந்த கஷ்டமும் ஏற்படாது.

எனினும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கு செல்வதற்கு பௌத்த மகா சங்கத்தையும் மக்களையும் திருப்திபடுத்தக் கூடிய வகையில் ரணில் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே தமிழ் மக்கள் ஏப்ரல் மாதத்தை அண்டிய காலத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும்.

அரசியல் யாப்பில் ஜனாதிபதி முறைமை தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு மிகவும் பாதகமானதும் எதிரானதும் ஆகும். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஜனாதிபதி ஆட்சி முறைதான் சிறந்தது .

அதுவே சிங்களத்தை பாதுகாக்க வல்லது என்பது ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் தீர்க்கதரிசனம். அதனை மகாசங்கமும் விரும்புகிறது.

சிங்கள தலைவர்களும் விரும்புகிறார்கள். எனவே ஜனாதிபதி பதவி அரசியல் சிங்களத் தலைவர்களுக்கு சுகமானது. தமிழர்களை ஒடுக்குவதற்கு இலகுவானது.

ஆகவே இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் அரிதினும் அரிதே. ஆட்சிக்கு வரும்வரை சிங்களத் தலைவர்கள் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்பார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் பதவி சுகத்தை அனுபவித்து நிலையாக அமர்ந்து கொள்வார்கள். இதுவே இலங்கை அரசியல் வரலாறு.

ஜனாதிபதி முறையில் ஒரு உப ஜனாதிபதி(எiஉந pசநளனைநவெ)பதவி நிர்ணயிக்கப்படவில்லை. பதில் கடமையாற்றுவதற்கான பதில் ஜனாதிபதி(யஉவiபெ pசநளனைநவெ) என்ற ஒரு சட்ட ஏற்பாடு மட்டுமே இந்த முறைமையில் உண்டு.

இதன் உள்ளார்ந்த காரணம் என்னவெனில் ஒரு தமிழரோ அல்லது ஒரு இஸ்லாமியரோ உப ஜனாதிபதி பதவியில் அமர்ந்து விடக்கூடாது என்பதுதான்.

அவ்வாறு அமர்த்தபட்டால் திடீரென பதவியில் உள்ள ஜனாதிபதி மரணமடையும் பட்சத்தில் இந்த உப ஜனாதிபதியான சிறுபான்மை சார்ந்தவர் நேரடியாக ஜனாதிபதியாக பதிவி வகிப்பார் என்பதையும் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு உப ஜனாதிபதி என்ற ஒரு பதவி நிலை அரசியல் சாசன ஏற்பாட்டில் செய்யாமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் சிறுபான்மையினரை ஒதுக்குவதற்கு, ஒடுக்குவதற்கு அழிப்பதற்கு சிங்கள பௌத்த தேசியவாதம் இவ்வாறான கடும்போக்கிலும், மனப் பாங்கிலும் உறுதியாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இந்த நிலையில் இலங்கை அரசியல் யாப்பு எல்லாவகையிலும் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகின்ற போதிலும் இந்த யாப்பில் தமிழ் தரப்பு தமக்குச் சாதகமாக சில விடயங்ளைக் கையாள இடமும் உண்டு.

அதில் முக்கியமான ஒன்று ஜனாதிபதித் தேர்தலில் விருப்பத்தேர்வு வாக்களிப்பு முறை. இந்த முறைமையை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கான ஒரு புள்ளி உண்டு.

அது என்னவெனில் தமிழ் மக்கள் தமது தரப்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி அனைத்து தமிழர்களும் தமது பொதுவேட்பாளருக்கு வாக்களித்து தமிழ் வாக்குகளை ஒன்று குவிப்பதன் மூலம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும்.

அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் தமது வாக்குகளை விருப்பத்தேர்வு அடிப்படையில் தமிழருக்கு மட்டும் அளிப்பதன் மூலம் சிங்கள தேசத்தில் ஏற்படுகின்ற சிங்கள வேட்பாளர்களின் போட்டியினால் மொத்த வாக்களிக்கப்பட்ட வாக்கில் 50மூஐ ஒருவர் பெற முடியாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

எனவே இந்தத் தருணத்தில் சிங்களத்தின் பிரதான போட்டியாளர்களின் வாக்கு வங்கிச் சமநிலையை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்கள் விளங்குவர்.

எனவே சிங்களத்தின் போட்டி வேட்பாளர்களை தமிழ் மக்களுடன் ஒரு பேரம் பேசுவதற்கு வரவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும்.

அவ்வாறு அவர்கள் அந்த நிர்ப்பந்தத்திற்கு இணங்காமல், வராமல் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெரும் வாய்ப்பு இருந்து வெற்றிபெற்றால் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார் என்பதனை வெளியுலகுக்கு காட்ட முடியும்.

ஆனால் சிங்கள தேசத்தை பொறுத்த அளவில் இவ்வாறு தமிழ் மக்கள் தமது ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைத்து தமிழர்களும் அந்த பொது வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார் என்று ஒரு நிலை தோன்றும்போது சிங்களத்தின் முதன்மை வேட்பாளர்கள் தமிழர் தரப்புடன் ஒரு பேரம் பேசலுக்கு நிச்சயம் வருவார்கள்.

அதனை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமது இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்கை பேரம்பேசலுக்கு இணங்கிய சிங்களத் தலைவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு உள்ளது.

அப்படி அவர் இரண்டாவது சுற்று வாக்கெண்ணுகையில் தமிழரின் வாக்குககளாற்தான் அதுவும் இரண்டாம் சுற்றிற்தான் பதவியைப் பெற்றார் என்ற நிலையை உருவாக்கவும் முடியும்.

இது தமிழருக்கு சற்று சாதகமான சுழலைத் தரவல்லது. அடுத்து பட்டியல் அடிப்படையில் இடைத்தேர்தல் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறை நிரப்புச் செய்து உறுப்பினர்களை மாற்றுவது.

எனவே பட்டியல் முறையின் கீழ் தமிழ் மக்களோ அரசியல் கட்சிகளோ தமது நாடாளமன்ற பிரதிநிதிகளை அடிக்கடி மாற்றி அதனை ஒரு போராட்ட வடிவமாக நாடாளுமன்றத்துக்குள் ஒரு போராட்டத்தை நடத்த முடியும்.

இவ்வாறு ஒரு போராட்ட வடிவத்தை மேற்கொண்டு சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தை கேலிக்குள்ளாக்கவும், குழப்பத்துக்கு உள்ளாக்கவும், இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கவும் முடியும்.

ஆகவே இலங்கை அரசியல் யாப்பில் இருக்கின்ற பட்டியல் முறைமையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் அனைத்துக் தமிழ் கட்சிகளும் உருவாக்கி ஐக்கிய முன்னணியின் ஊடாக தமக்கான ஆசனப் பங்குட்டை அவரவர் கட்சியின் தகுதிநிலைக்கு ஏற்ற அளவில் பங்கிட்டு கூட்டாக ஓரணியில் நின்று போட்டியிடுவதன் மூலம் இலங்கை அரசியலில் தமிழ் மக்கள் பெறக்கூடிய அதிக கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கே தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கு இடையில் கோட்பாட்டு ரீதியில் பெரிய வேறுபாடு கிடையாது. அனைவரும் சமஸ்டி என்பதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

எனவே சமஸ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து ஓர் அணியில் நின்று தேர்தலை எதிர்கொள்ள முடியும். அவ்வாறு எதிர்கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் தமக்குரிய முழுமையான ஆசனங்களை பெற முடியும்.

இவ்வாறு பெறப்பட்ட அதிகூடிய ஆசனங்களை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்த முடியும்.

இந்த கூடிய ஆசனங்களை ஆறு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு என்று நிர்ணயம் செய்து சுழற்சி முறையில் நாடாளுமன்ற ஆசனங்களை மாற்றீடு செய்வதும் அவ்வாறு மாற்றீடு செய்வதன் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஒரு அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் தலைவர்களை உள்ளே அனுப்பி, நாடாளுமன்ற நிலைமைகளை கையாளக்கூடிய பயிற்சியை வழங்குவதற்கான வாய்ப்புகளும் இங்கே உண்டு. சுழற்சி முறையில் நாடாளுமன்ற ஆசனம் வழங்கப்படுவதனால் அரசியல் கட்சிகளுக்காக மிகக் கடுமையாக உழைக்கக்கூடிய திறன் வாய்ந்த ஏராளமான புதிய அரசியல் வாதிகள் தோன்றுவார்கள்.

தமிழர் அரசியல் பரப்பில் ஒரு அரசியல் புரட்சியையும் இதன் மூலம் ஏற்படுத்த முடியும். இதனால் நலிவடைந்து போய் உள்ள தமிழ் தேசியத்தை மீண்டும் வலுப்படுத்தி இறுக்கமாக கட்டமைப்புச் செய்யவும் இந்த நடைமுறை உதவும் கடந்த 75 ஆண்டுகளில் தமிழ் தலைமைகள் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்று நாடாளுமன்றத்தில் பேச்சு போட்டிகளையும், விவாதங்களையும் வலுவாக வைத்து பெரும் கூக்குரலட்டும் எதுவும் நடக்கவில்லை.

சட்டங்களுக்கூடாக தங்கள் வாதத் திறமைகளை முன்வைத்து நீதிமன்றங்களை நாடியும் எதனையும் சாதிக்க முடியவில்லை.

எனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை சூழலுக்கு ஏற்ற வகையில் பிரயோகித்து சிங்கள ஆட்சியாளர்களையும் இலங்கை நாடாளுமன்றத்தையும் நெருக்கடிக்கு தள்ளுவதும் சிக்கலுக்கு உள்ளாக்குவதும்தான் தமிழ் மக்கள் தமக்கான தேசிய அபிலாசைகளின் சில பகுதிகளையாவது அடைய முடியும்.

எதிரியை சிக்கலுக்கு உள்ளாக்காமல், நிற்பந்தத்துக்கு உள்ளாக்காமல் எதிரியிடமிருந்து எதனையும் பெற முடியாது என்ற எதார்த்தத்தை கடந்தகால இலங்கையின் ஜனநாயக நாடாளுமன்ற அரசியல் தமிழ் மக்களுக்கு நிரூபித்துள்ளது.

கடந்த காலங்களில் தொடர்ந்து சிங்கள பெருந்தேசிய வாதத்தின் கீழ் ஒத்தோடியும், அடிபணிவு அரசியல் நடத்தியும் தமிழ் மக்களுக்கு தமிழ் தலைமைகளால் எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற வரலாற்றுப் படிப்பினையிலிருந்து தமிழ்த் தலைமைகள் பாடங்களைக் கற்றிருக்கிறதா?

இந்தப் படிப்பினையில் இருந்து புதிய பாதைக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மக்களுடைய ஒருமித்த கருத்துதான் இறைமை. அந்த மக்கள் இறைமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தமது இறைமையை இப்போது சரியாக பயன்படுத்த வேண்டும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தமது இறைமையை அறிவார்ந்த ரீதியில் பிரயோகிக்க வேண்டும்.

எனவே இந்தச் சூழமைவில் எதிர்வரும் தேர்தலை தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகவும் தமக்கு பலமாகவும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

முள்ளிவாய்க்கால் பேராவலத்தின் பின்னர் தமிழ் மக்களுடைய ஜனநாயக அரசியல் வெளியும். தமிழ் தேசியமும் பெரும் சிதைவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும், தமிழ் மக்களுடைய ஜனநாயக வழியை வலுப்படுத்தவும், தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தம்மிடையே எந்த வகையான விட்டுக்கொடுப்புக்களையும் செய்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க இன்றைய நடைமுறையில் உள்ள அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும்.

Bootstrap