இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் தகவல்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஐந்து விடுதிகள் தனக்குச் சொந்தமானவை என அவர் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஷிரானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷிரானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டை விட்டுத் தப்பியோடி டுபாயில் தலைமறைவாகியிருந்த ஷிரான் பாஸிக், அங்கு கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார். 48 வயதான ஷிரான் பாஸிக் தெஹிவளையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுடன் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுடனும் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

Bootstrap