பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கும் மறைந்த இளவரசி டயானாவுக்கும் பிறந்தவர் இளவரசர் ஹாரி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மேகன் மார்க்கல் என்ற அமெரிக்க நடிகையைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரிட்டன் அரச குடும்பத்தின் வெள்ளையர் அல்லாத முதல் இளவரசி என்ற பெருமையையும் மேகன் மார்க்கல் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு, மேகன் ஒரு நடிகை மற்றும் வெள்ளையர் அல்லாதவர் என்ற காரணங்களைக் காட்டி, அவருக்கு எதிராக அரச குடும்பத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.
இதனால், இளவரசர் ஹாரி, 2020-ஆம் ஆண்டு தானும் தனது மனைவி மேகனும், குழந்தையும் அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், தனது திருமணத்திற்காக ராணி எலிசபெத் பரிசாக வழங்கிய சசெக்ஸ் அரண்மனையையும் துறந்து குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். 2021-ஆம் ஆண்டு ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டி மற்றும் 2023-ஆம் ஆண்டு ஹாரி வெளியிட்ட Spare சுயசரிதை ஆகியவை அரச குடும்பத்திற்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகப் பேசப்பட்டன. இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு மீண்டும் அரச குடும்பத்தில் இணைய விரும்புவதாக அறிவித்திருந்தார்.
தற்போது, இளவரசர் ஹாரி மீண்டும் பிரிட்டன் திரும்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக இல்லாத ஒரு வீட்டில் அவர்கள் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோரும் வரும் செப்டம்பர் முதல் இங்கிலாந்தில் பள்ளிக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், இவர்களை மீண்டும் அரச குடும்பத்தில் இணைப்பது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், அவர்கள் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைகளுக்காக மீண்டும் குடும்பத்துடன் இணைய ஹாரி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காதலுக்காக அரச பதவியை துறந்து மீண்டும் பிரிட்டனுக்கு வருவது அந்நாட்டு மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.