ஒரு மிகப்பெரிய சூறாவளி உருவாகி அருகில் உள்ள மரங்களையும், லாரி, பேருந்து, கார் போன்ற வாகனங்களையும், தனக்குள்ளே இழுக்கும். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், அந்த வீட்டையே உள்ளிழுக்கும் அளவுக்கு அந்த சூறாவளி மிகப்பெரியதாக இருக்கும்.
இயற்கை சீற்றங்களை மையமாக கொண்டு உருவாகும் ஹாலிவுட் படங்களில் தான் இப்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இது நிஜமாகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள ஓஷன் சிட்டி மற்றும் பெர்லின் பகுதிகளில், மிகத் தீவிரமான சூறாவளி ஏற்பட இருப்பதாக, அந்நாட்டின் தேசிய வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 56 கி.மீ வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்வதாக கணிக்கப்பட்டுள்ள இந்த சூறாவளி, மிக மிக ஆபத்தானது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சூறாவளியுடன் சேர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்யும் என்று எச்சரித்துள்ள வானிலை மையம், ஃபென்விக் தீவு, பெத்தானி கடற்கரை பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளது.
மரங்கள் வேரோடு சாய்வதற்கும், வாகனங்கள் உருண்டு விழுவதற்கும், மொபைல் வீடுகள் தூக்கி வீசப்படுவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, நியூயார்க் பகுதியில் இதேமாதிரியான சூறாவளி ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால், மேரிலாந்து பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஓஷன் சிட்டி கடற்கரையில் வானம் மிகவும் அச்சுறுத்தும் வகையில் மாறிய புகைப்படங்களும், வீடியோக்களும், வைரலாக பரவி வருகிறது.