அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான கனடிய பொருட்கள் மீதான புதிய வரிகள் அமலுக்கு வருவதற்கு முன், வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க மதுபானங்கள் மீதான கனடாவின் கொள்கைகள், வாகன வரிகள் மற்றும் பால் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக எஃகு (Steel), அலுமினியம், பூச்செடிகள், ஹாக்கி மட்டைகள் முதல் சிமெண்ட் வரை பரந்த அளவிலான கனடிய ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) மற்றும் தலைமை பேச்சுவார்த்தையாளர் ஜேனிஸ் சாரெட் (Janice Charette), அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீயருடன் (Jamieson Greer) வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக லெப்லாங்க் தெரிவித்துள்ளார்.
கனடிய எஃகு மற்றும் அலுமினியத்திற்கான வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக, கனடா தனது பால் இறக்குமதி உரிம ஒதுக்கீட்டில் மாற்றங்களை செய்யும் மற்றும் கனடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்.
அமெரிக்க மதுபானங்களை மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளின் அலமாரிகளில் வைக்க பிரதம மந்திரி மார்க் கார்னி (Mark Carney) மாகாண முதல்வர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருந்தால் இதற்கு சம்மதிப்பதாக பல மாகாணங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், முழுமையான ஒப்பந்த விவரங்களை பொறுத்தே முடிவெடுக்கப்படும் என கியூபெக் (Quebec) மாகாணம் நிபந்தனை விதித்துள்ளது.