கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் (Prince George) பகுதியில், சாலையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்; பல வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் தங்களின் அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜேமி பாவ்லுக் (Jaime Pawliuk) கூறுகையில், விமானம் தன்னை நோக்கி அதிவேகமாக வந்ததாகத் தெரிவித்தார்:
திடீரென விமானம் என் வாகனத்திற்கு மேல் வந்தது. சாலையோரப் பள்ளத்தில் வண்டியை திருப்ப முயன்றேன், ஆனால் விமானத்தின் இறக்கை எனது காரின் கூரையைச் சீவிச் சென்றது."
கைகளில் கண்ணாடிகள் குத்தி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையிலும் கண்ணாடிகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பிவிட்டேன்."
அவரது SUV ரக வாகனத்தின் சன்ரூஃப் நொறுங்கி, பின்சீட்டில் உலோகக் கம்பி ஒன்று குத்தியிருந்தது.
விமானத்தின் இறக்கை ஒரு பிக்கப் டிரக் மீது மோதியதையும், அதன் புரோபெல்லர் (விசிறி) சாலையில் தனியாகக் கிடந்ததையும் கண்டதாகக் கூறினார்.
காரின் கூரை சேதமடைந்து வீதிக்கு வெளியே தள்ளப்பட்ட போதிலும், காரிலிருந்த இருவர் காயங்களின்றித் தப்பினர்.
விபத்து குறித்து போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (TSB) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.