காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – உக்ரைன் வணிக வளாகத்தில் மீட்புப் படையினரை இலக்கு வைத்த ரஷ்யா: 22 குழந்தைகள் காயம்!

உக்ரைனின் மத்திய பகுதியிலுள்ள அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரீக் (Kryvyi Rih) நகரிலுள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர் என்றும், 29 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

முதல் ட்ரோன் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு, மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டாவது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மீட்புப் படையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடூர நடவடிக்கை எனக் கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இத்தாக்குதலை ஒரு "காட்டுமிராண்டித்தனமான மற்றும் பயங்கரவாதச் செயல்" என விமர்சித்ததுடன், இதற்கு உக்ரைன் நிச்சயமாகத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ், இது ரஷ்யாவின் திட்டமிட்ட பயங்கரவாதம் என்றும் உக்ரைனிய நகரங்களை வாழத் தகுதியற்றதாக மாற்ற ரஷ்யா முயல்கிறது என்றும் சாடியுள்ளார். அதேபோல், பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு எதிரானது என ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதே நாளில் உக்ரைனின் தெற்குப் பகுதியான மைகோலைவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய மற்றொரு ட்ரோன் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும், தலைநகர் கெய்வ் மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர் தற்போது 4-ரை ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன

Bootstrap