இரானின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் அனைத்து நாடுகளுக்குமான "போர்ப் பிரகடனம்" ஆகும் என்று இரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான உறுப்பு நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிகாரம் செலுத்த முயல்வதாக இரான் சாடியுள்ளது.
அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் சொந்த எல்லைப் பகுதி போலக் கருதுவதாக அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இரான் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், அவர்கள் இன்னும் சரியான முடிவுக்கு வரத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இரானின் இராணுவக் கொள்கை "தற்காப்பு" நிலையில் இருந்து "தாக்குதல்" நிலைக்கு மாறத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா கூறியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்து ஓமன் மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வழியே கலந்துரையாடினர்.
மற்றொருபுறம், போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் தெற்கு லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களையும் கட்டிடங்கள் தகர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.