பெய்ஜிங்கில் நடைபெறும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், சீனாவைச் சேர்ந்த 'டியான்ங்காங் அல்ட்ரா' (Tiangong Ultra) என்ற ஹியூமனாய்டு ரோபோ 100 மீட்டர் இலக்கை 9.39 வினாடிகளில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 2009-இல் படைத்த 9.58 வினாடி உலக சாதனையை விட அதிவேகமானது.
'பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ இன்னோவேஷன் சென்டர்' உருவாக்கிய டியான்ங்காங் அல்ட்ரா, பந்தயத்தின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்தாலும் இறுதிப் பகுதியில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆனர் (Honor)-இன் 'லைட்னிங்' (Lightning) ரோபோவை முந்தி முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் பிடித்த லைட்னிங் ரோபோ இந்த பந்தயத்தை 9.47 வினாடிகளில் கடந்து, அதுவும் உசேன் போல்டின் சாதனையை முறியடித்தது. முன்னதாக நடைபெற்ற பயிற்சி சோதனையில் லைட்னிங் ரோபோ 100 மீட்டரை 9.32 வினாடிகளில் கடந்து, வினாடிக்கு 14.5 மீட்டர் உச்ச வேகத்தை எட்டியிருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்கப் போட்டியில் 100 மீட்டரை 21.50 வினாடிகளில் கடந்த டியான்ங்காங், ஒரே ஆண்டில் தனது வேகத்தை வியக்கத்தக்க வகையில் உயர்த்தியுள்ளது. மேலும், ஆனர் நிறுவனத்தின் லைட்னிங் ரோபோ சமீபத்தில் நடைபெற்ற 21 கி.மீ அரை மாரத்தான் பந்தயத்தை 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து மனிதர்களின் உலக சாதனையை விட அதிவேக நேரத்தைப் பதிவு செய்தது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் இதன் கால்களின் நீளத்தை போட்டிக்கு முன் 10 செ.மீ உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையை முக்கிய மூலோபாயத் தொழிலாக சீனா ஊக்குவித்து வருகிறது. பெய்ஜிங்கில் நடைபெறும் இப்போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 666 அணிகளிலிருந்து 2,056 ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.