உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!

காஸா நகரின் ஜீடூன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முகமது அல்-சஹ்வி என்பவர் வீதியோரக் விற்பனைத்தளத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தபோது கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்தநிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, அவரது 20 வயதான மகன் உமர் அல்-சஹ்வி மயானத்திற்குச் சென்றபோது, அங்கே இடநெருக்கடி காரணமாகப் பல உடலங்கள் மிக நெருக்கமாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

தற்போது காஸாவில் ஒரு புதைகுழியை அமைப்பதற்கு சுமார் 500 முதல் 1,000 டொலர்கள் வரை செலவாகிறது.

இந்தத் தொகையைச் செலுத்த முடியாததாலும், புதிய புதைகுழிக்கு இடம் இல்லாததாலும் உமர் தனது தந்தையின் உடலைத் தாத்தாவின் புதைகுழியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

போரின் காரணமாக 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், இஸ்ரேலியத் தாக்குதல்களால் காஸாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மயானங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

வீடுகளை இழந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்குவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதால், மயானப் பகுதிகள் தற்காலிக முகாம்களாக மாறியுள்ளன.

முறையான கல்லறைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் கிடைக்காததால், மக்கள் இடிபாடுகளின் செங்கற்கள், மண் மற்றும் தகரங்களை மட்டுமே அடையாளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், காசாவின் அறநிலையத்துறை அதிகாரிகள் புதிய மயான நிலங்களைக் கண்டறிய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருந்தபோதிலும், தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுக்கு இடையே உயிரிழந்தவர்களைக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது பாலஸ்தீன மக்களுக்கு பெரும் சவாலாகவே நீடிப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

Bootstrap