வலி.வடக்கில் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம் - சுமந்திரன், சாணக்கியன் நேரில் பங்கேற்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, இன்றைய போராட்டத்திலும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.

பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக 10 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள், தமது பூர்வீக காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கோரி போராடி வரும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.

பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை உரிய முறையில் விடுவித்து, மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

நீண்டகாலமாக தமது காணிகளை மீட்பதற்காக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மக்களின் காணி உரிமை மற்றும் மீள்குடியேற்ற உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதுடன், இந்தப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகவும் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

Bootstrap