வடகிழக்கு பிரித்தானியாவின் சவுத் பேங்க் பகுதியில் சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 07 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 3:39 மணியளவில், பிரதான வீதியொன்றில் தவறான பாதையில் அதிவேகமாக சென்ற 'வோக்ஸ்வேகன் பாஸாட்' ரகக் கார் ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் காரில் பலமாக மோதியதில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளீவ்லேண்ட் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் பணி முடிந்து வீடு திரும்பவிருந்த வேளையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், மற்றுமொரு காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள கிளீவ்லேண்ட் பொலிஸ் தலைமை அதிகாரி விக்டோரியா புல்லர், பணி முடிந்து குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டிய இரு அதிகாரிகளை இழந்தமை பொலிஸ் திணைக்களத்துக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் ‘லைக்குகள்’ பெறுவதற்காக சில இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான பாதையில் வாகனங்களைச் செலுத்தும் அபாயகரமான சவால்களில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டிருந்த பின்னணியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய ஆபத்தான மற்றும் சட்டவிரோதச் செயல்களை ஊக்குவிக்கும் காணொளிகளை சமூக ஊடகத் தளங்களில் இருந்து உடனடியாக அகற்றுவது தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த கோர விபத்து தொடர்பில் பிரித்தானியாவின் பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.