ஜப்பானின் மிக உயரமான ஃபூஜி மலையேற்றத்தின்போது, களைப்பால் அழத் தொடங்கிய 7 வயது மகனை வழியில் தனியாக விட்டுவிட்டு மலையேறிச் சென்ற தந்தையின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜப்பானின் நாகோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 7 வயது மகன் மற்றும் மூத்த மகனுடன் ஃபூஜி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் உயரத்தில் (6-வது முகாம் அருகே) சென்றுகொண்டிருந்தபோது, 7 வயது சிறுவன் கடும் களைப்பு காரணமாக மேலே செல்ல முடியாமல் அழத் தொடங்கியுள்ளான்.
அவ்வேளை சிறுவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லாமல் அல்லது அவனுடன் தங்காமல், "இங்கேயே காத்துக்கொண்டிரு" எனக் கூறிவிட்டு, தந்தை தனது மூத்த மகனுடன் மலையின் உச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துள்ளார்.
அதிகாலை நேரத்தின் கடும் குளிரிலும் அடர்ந்த மூடுபனியிலும், எவ்விதப் பணமும் போதிய உணவும் இன்றி அச்சிறுவன் மரப் பலகையில் தனியாக அமர்ந்திருந்துள்ளான்.
காலை 7:30 மணியளவில் அப்பகுதியில் இருந்த மலைக்குடில் ஊழியர் ஒருவர், அச்சிறுவன் தனியாக அமர்ந்திருப்பதை கவனித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுவனைப் பத்திரமாக மீட்டுத் தங்களின் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
அதன் பின்னர், சுமார் 8-வது முகாம் வரை மேலே சென்றிருந்த தந்தையைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பொலிஸார், உடனடியாகக் கீழே இறங்கி வருமாறு தந்தைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தந்தையை கடுமையாக எச்சரித்த பொலிஸார், அதன் பின் சிறுவனை தந்தையிடம் ஒப்படைத்தனர்.
மலைப் பகுதிகளில் ஆபத்தான சூழலில் 7 வயதுக் சிறுவனைத் தனியாக விட்டுச் சென்ற தந்தையின் அலட்சியப் போக்கிற்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் மலையேற்ற வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்