கனடா உயர்ஸ்தானிகர் - மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், (H.E.Isabelle Martin) நேற்று (24) மத்திய மாகாண ஆளுநர் வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோவை கண்டியிலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், 'டிட்வா' பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய மாகாணத்தின் சுற்றுலாத் துறை வளங்களை உயர்மட்டத்தில் பயன்படுத்தி அத்துறையை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பேரிடர் காலங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற சினேகபூர்வ இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் மத்திய மாகாண ஆளுநருக்கும் கனடா உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் நிஷாந்த கருணாதிலக மற்றும் ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர் சதுர திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Bootstrap