"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான கிருத்தி சனோன், தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நகைக்கடை விளம்பரம் ஒன்றில் ரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கு இத்தகைய ஆடைகள் உகந்ததல்ல என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், "பெண்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கிருத்தி சனோன் பதிலளித்துள்ளார்.

"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.

ரக்சா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம்.

ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.

பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல.

பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?

காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய ஆடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாசாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.

பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய கழுத்துப் பகுதியில் அல்ல " என தெரிவித்துள்ளார்.

Bootstrap