நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 98 பேர் பலி

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இப் பேரழிவில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர் (நேபாளத்தில் 95 பேர், திபெத்தில் 3 பேர்). 400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இதில் 341 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்.காணாமல் போனவர்களில் 24 பேர் கனடா நாட்டவர்கள் என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா (133 பேர்), அமெரிக்கா (47 பேர்), ஆஸ்திரேலியா (34 பேர்), மற்றும் பிரித்தானியா (33 பேர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

 காணாமல் போன இந்தியர்களில் பலர் திபெத்தில் உள்ள கயிலாய மலைக்கு (Mount Kailash) புனித யாத்திரை சென்றவர்கள். இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை சரிந்து விழுந்ததில் 'லெண்டே கோலா' (Lhende Khola) ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது. பின்னர், அந்த அணை போன்ற அடைப்பு உடைந்து திடீரென சீறிப்பாய்ந்த பெருவெள்ளமே இந்த அழிவிற்குக் காரணம் என பருவநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு சற்று முன், காத்மாண்டுவிற்கு வடக்கே 100 கி.மீ தொலைவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் 'நுவாகோட்' (Nuwakot) மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.போதேகோஷி (Bhotekoshi), திரிசூலி (Trishuli) மற்றும் நாராயணி (Narayani) ஆகிய ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பல அடுக்குமாடி கட்டிடங்கள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் வாகனங்கள் சேற்றிலும் நீரிலும் அடித்துச் செல்லப்பட்டு புதைந்துள்ளன.

நேபாள அரசு தனது நாட்டின் காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டு தீவிர மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது (மீட்புப் பணியில் ஈடுபட்ட 28 காவலர்களையும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது).

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் மனிதநேய அடிப்படையில் உதவிகளையும் மீட்புக் குழுக்களையும் வழங்கி வருகின்றன.

இமயமலைப் பகுதி உலக சராசரியை விட அதிவேகமாக வெப்பமடைந்து வருவதால், பனிப்பாறைகள் உருகுவதும் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என சர்வதேச மலை வளர்ச்சி மையம் (ICIMOD) எச்சரித்துள்ளது.

Bootstrap