இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்களுக்கு நாடு திரும்ப சட்டரீதியான தளர்வு

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கும் அல்லது கைதுகளுக்கும் உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததால் கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றி தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு திரும்புவோரின் மீள்குடியேற்றத்திற்கும் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2009 முதல் 2024 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 811 ஏக்கர் அரச காணிகளும் 21,942 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20 வரை யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அமைச்சர், அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதி அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Bootstrap