நேபாள வெள்ள நிவாரணத்திற்கு உதவ இலங்கை தயார்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் நிலைமை தொடர்பில், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானலுடன் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பேரழிவைத் தொடர்ந்து நேபாளத்திற்கு தேவையான உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையங்கள் நேபாள அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடுமான நேபாளத்திற்கு இலங்கை தனது ஒற்றுமையிலும் அர்ப்பணிப்பிலும் உறுதியாக உள்ளது” என அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Bootstrap