தெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்தவொரு இஸ்லாமிய நாட்டின் நிலப்பரப்பும் மற்றொரு இஸ்லாமிய நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது என அவர் கூறினார்.
கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, ஈரான் அதிகாரிகளைச் சந்திக்க தெஹ்ரான் வருகிறார். பாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் ஓமன் வெளியுறவு அமைச்சரும் சமீபத்தில் தெஹ்ரான் வந்து சென்றுள்ளனர்.
அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக ஈரானிய ரியால் நாணயத்தின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்காரணமாக உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியாமல் ஈரான் திணறி வருகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் சில சலுகைகளை வழங்க முன்வந்தால், தூதரகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப தயார் என்பதை அமெரிக்கா மறைமுகமாக உணர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.