இரத்த நோயால் பாதிக்கப்பட்டு ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆகஸ்ட் 17 முதல் சிகிச்சை பெற்று வரும் 89 வயதான நார்வே மன்னர் ஹாரால்டின் (King Harald) உடல்நிலை மிகவும் மோசமடைந்து "கவலைக்கிடமான" நிலையில் உள்ளதாக அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னரின் உடல்நிலை காரணமாக ராணி சோனியா மற்றும் இடைக்காலப் பொறுப்பாளராகச் செயல்படும் இளவரசர் ஹாக்கூன் (Crown Prince Haakon) ஆகியோர் தங்களுடைய அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளனர்.
மன்னரின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அவருடன் இருக்கும் நிலையில், ராணி, ஹாக்கூன் மற்றும் அவரது மனைவி மேட்டே-மாரிட் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
சிவப்பு இரத்த அணுக்கள் விரைவாக அழிவடையும் 'ஹிமோலிடிக் அனீமியா' (Haemolytic Anaemia) நோயால் மன்னர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கார்டிசோன் சிகிச்சையினால் ஏற்பட்ட நீர் தேக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐரோப்பாவின் மிகவும் வயதான மன்னரான இவர், நார்வே பாராளுமன்றத்தில் வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதாக பிரமாணம் செய்துள்ளதால், பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.