உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.