"அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் இந்நேரம் உயிருடன் இருந்திருக்கவே முடியாது" - அசுர வெள்ளத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய நேபாள தொழிலாளி

நேபாளத்தின் திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவும், அதைத் தொடர்ந்த அசுர வெள்ளமும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. மண்சரிவால் ஆற்று நீரில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர். இந்த பேரிடரில் இதுவரை 332 பேர் உயிரிழந்ததாகவும் பலரைக் காணவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான தொழிலாளி ஒருவர், வெள்ளத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குழிக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எழுந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். பிபேக் குழியிலிருந்து வெளியேறுவதற்குள், சீறிப் பாய்ந்து வந்த சேற்று வெள்ளம் அவரை வேகமாக அடித்துச் சென்றுள்ளது.

கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட அந்தத் தொழிலாளி, வழியில் இருந்த ஒரு மாமரத்தைப் பலமாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளார்.

மரக்கிளையை இறுக்கமாகப் பற்றியபடி பல மணி நேரம் உயிருக்குப் போராடியவரை, மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

"அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் இந்நேரம் உயிருடன் இருந்திருக்கவே முடியாது" என காத்மாண்டு தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தத் தொழிலாளி கண்ணீருடன் உருக்கமாகக் கூறியுள்ளார்.

வெள்ளப் பெருக்காலும் இடிபாடுகளாலும் அப்பகுதியின் வீடுகளும் வாகனங்களும் முற்றிலும் உருக்குலைந்து போயின. இதுவரை காயமடைந்த 114க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காத்மாண்டு மற்றும் ரசுவா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்சரிவு ஏற்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியில் 4.4 ரிச்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் பதிவானதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அங்கு ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி காணாமற்போனவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Bootstrap