சீனாவில் மனித வடிவிலான ரோபோக்களின் (Humanoid robots) உற்பத்தி மற்றும் அரச முதலீடுகள் அதிகரித்துள்ளன.
எனினும், அவை, இன்னும் தொழிற்சாலைப் பணிகளுக்குப் போதுமான வேகம் மற்றும் நுண்ணறிவுடன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி பிராந்தியத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் 100-க்கும் மேற்பட்ட மனித வடிவிலான ரோபோக்கள் பெட்டிகளை வரிசைப்படுத்துவது மற்றும் நூடுல்ஸ் பொதி செய்வது போன்ற எளிய பணிகளுக்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இவை மிகவும் மெதுவாகவும் தடுமாற்றத்துடனும் செயல்படுகின்றன. 50 முயற்சிகளுக்குப் பிறகுதான் ஒரு பயனுள்ள அசைவை ரோபோவிடம் இருந்து பெற முடிகிறது.
குங்பூ நடனங்கள் மற்றும் குத்துச்சண்டை போன்ற காட்சிகளில் அசத்தினாலும், பொதுவான தொழிற்சாலைப் பணிகளுக்குத் தேவையான 'அறிவுத்திறன்' (IQ) மற்றும் உள்ளுணர்வு இந்த ரோபோக்களிடம் இல்லை என்று நிறுவனத் தலைவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு உலகளவில் அனுப்பப்பட்ட 20,000 மனித வடிவிலான ரோபோக்களில் 95% சீனாவைச் சேர்ந்தவை ஆகும்.
இந்த ஆண்டு 100,000 க்கும் அதிகமான ரோபோக்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய சீன ரோபோக்கள் இறக்குமதியை ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.