அடுத்தப் பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

'இந்தியா டுடே - சி வோட்டர்' இணைந்து நடத்திய சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் வெளியாகி உள்ளன. இதில் 2024-ல் தீவிர அரசியலில் களமிறங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பிரபல பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்துள்ளார்.

இந்தக் கருத்துக் கணிப்புப் பட்டியலில் திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி 2% வாக்குகளுடனும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 1.7% வாக்குகளுடனும் விஜய்க்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், 'காஃக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மூலம் புகழ்பெற்ற வளர்ந்து வரும் இளம் தலைவர் அபிஜீத் திப்கே 1.3% வாக்குகளைப் பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் 1.2% வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

Bootstrap