நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் – டிரம்ப் அறிவிப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மத்திய மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு, பாறைகள் மற்றும் சேறுகளுடன் சுமார் 30 அடி உயரத்தில் பெருக்கெடுத்து நேபாளத்தை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் ரசுவா மற்றும் தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் போடே கோஷி ஆற்றில் கலந்து, பின்னர் திரிசூலி ஆற்றிலும் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

கட்டுக்கடங்காமல் பாய்ந்த வெள்ளம் ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த வீடுகள், கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகளை அடித்துச் சென்றுள்ளது. சில பகுதிகளில் கிராமங்களே வெள்ளத்தில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அனர்த்தத்தில் 32 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேபாள இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேபாள பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 600 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான் மற்றும் கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை நிறைவடைந்த சிலர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துடன் அமெரிக்கா தொடர்பு கொண்டுள்ளதாகவும், அந்நாட்டுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“நேபாளத்துடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. இது ஒரு கொடூரமான நிகழ்வு. இது வெறும் வெள்ளம் அல்ல; சேறும் நீரும் கலந்த மிகப்பெரிய பேரழிவாகும். இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் வலுவான கட்டிடங்கள்கூட தீக்குச்சிகளைப் போன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அமெரிக்கா ஏற்கனவே உதவிகளை அனுப்பி வருவதாகவும், நேபாளத்துக்கு தேவையான அனைத்தையும் வழங்குவதாக அந்நாட்டு தலைவர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Bootstrap