கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் - பிரதேச சபை அனுமதியின்றி அடாத்தாக அமைப்பு

வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார் பார்க்காத வகையில்  உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள், குறித்த தியான மண்டபம் உரிய அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்படுவருவதை கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

உள்ளூர் ஆட்சி மன்ற அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் குறித்த பௌத்த கட்டுமானம் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு பிரதேச சபையை தவிசாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது தொடர்புகொள்ள முடியாத நிலையில் உறுப்பினர் ஒருவரை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் ஏற்கனவே சபை நிறுத்துமாறு அறிவுறுத்தல் ஒட்டிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் அந்த கட்டுமானம் இடம்பெற்று வருகின்ற நிலையில் சபையில் இது தொடர்பில் பேசி இருக்கிறோம்.

உள்ளூர் ஆட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் தொடர்பில் உரிய நடைமுறைகளை பின்பற்றி அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் கட்டுமானம் தொடருமானால் நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

Bootstrap