சிறுவனின் வயிற்றில் இருந்த 48 பொருட்கள்!

திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரித்திக் ரோஷன் (16) மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அவரது தாயார் சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி வருவதாக கூறி திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 22ஆம் தேதி கொண்டு சென்றுள்ளார்.

தனியார் மருத்துவமனை பொது அறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரபாண்டியன் உடனடியாக ரித்திக் ரோஷனை பரிசோதனை செய்ததுடன் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது இரைப்பையில் சந்தேகத்திற்குரிய கூர்மையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரது தாயாரிடம் விசாரித்த பொழுது அடிக்கடி நகவெட்டி, செயின் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போகும் என குறிப்பிட்டார்.

நள்ளிரவில் மயக்க மருந்து நிபுணரை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் சிறுவனின் இரைப்பையில் இருந்து 23 எண்ணிக்கையிலான 5 ரூபாய் நாணயங்கள், தாயத்து, நகவெட்டி, ஹேர்பின், இரும்பினால் ஆன கூர்மையான பொருட்களை அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பான முறையில் அகற்றினர்.

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சிறுவன் நலமுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிறுவன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார வசதி இல்லாத சிறுவனின் தாயார் குறிப்பிட்டதால் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மனவளர்ச்சி குன்றிய இளைஞரின் இரைப்பையில் இருந்து பல்வேறு வகையான கூர்மையான பொருட்களை அகற்றியதுடன் மருத்துவம் செய்ததற்காக எந்தவித பணமும் வாங்காத மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

Bootstrap