திருச்சியில் இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ளமும், அதன் வரலாற்றுச் சுவடுகளும் குறித்து தெரிந்துகொள்ளலாம்..

காவிரிக் கரையின் தென்புறத்தில் அமைந்துள்ள திருச்சி இன்றளவும் வெள்ளச் சுவடுகளை தாங்கி நிற்கிறது என்பது நம்மில் பலரும் அறியாதது. திருச்சியும் காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் வரலாற்றுக் காலம் தொட்டே பல வெள்ளப் பெருக்குகளைச் சந்தித்துள்ளன.

கி.பி.100 முதல் கி.பி 300க்கு இடைபட்ட காலத்தில் காவிரி வெள்ளத்தில் புதையுண்ட ஸ்ரீரங்கம் கோயிலை சோழ மன்னன் கிள்ளிவளவன் மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 10 முறை பெருவெள்ளத்தை எதிர்கொண்ட திருச்சியில் 1924 மற்றும் 1977இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளே மிகவும் மோசமானவை ஆகும்.

குறிப்பாக, 1977 நவம்பரில் வீசிய தீவிரப் புயலால் தீபாவளிப் பண்டிகையின்போது காவிரி மற்றும் கொள்ளிடத்தில் கரைபுரண்டோடிய வெள்ளம், ஸ்ரீரங்கத்தைத் தனித்தீவாக்கி நகரின் பெரும்பாலான பகுதிகளை நீரில் மூழ்கடித்தது.

நாகப்பட்டினம் கடல் சீற்றத்திலிருந்து தப்ப 1833இல் திருச்சிக்கு இடமாற்றப்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்கள் இதில் பெரும் சேதத்தைச் சந்தித்தன. நூலகத்தில் இருந்த பல்வேறு நூல்கள், அறிவியல் உபகரணங்கள் மற்றும் 50 பசுக்கள் அடித்துச் செல்லப்பட்டன.

அன்றைய மதிப்பில் சுமார் 155 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வரலாற்றுப் பேரழிவையும் வெள்ளம் வந்தபோது தேங்கிய நீர்மட்டத்தையும் நினைவுகூரும் வகையில் M.F.L - NOVEMBER 13, 1977 அதிகபட்ச வெள்ள அளவு என்ற குறியீடு, செயின்ட் ஜோசப் கல்லூரி சுவர்களிலும் ஸ்ரீரங்கம் வாட்டர் ஹவுஸ் கட்டடத்திலும் இன்றும் அழியாத அடையாளமாகப் பாதுகாக்கப்படுகிறது.

Bootstrap