ஈரான் அதிபர் - நரேந்திர மோடி சந்திப்பு

ஈரான் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலையிலும், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட முயற்சிகளும் இதுவரை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அமெரிக்கா, ஈரான் மீது ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற பெயரில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான், கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு இன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபா்புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட 10 உறுப்புநாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தநிலையில் தான், இந்த மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகிய இருவரும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தசந்திப்பின் போது, ஹார்முஸ் நீரிணை முடக்கம், இந்திய மாலுமிகள் மீதான் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஈரானில் அமைந்துள்ள சாபஹார் துறைமுக மேம்பாடு மற்றும் அதன் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர் எனவும் மத்திய கிழக்கில் அமைதியைக் மீட்டெடுப்பது, வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் போக்குவரத்தின் சீரான இயக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தசந்திப்பு குறித்தான புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, பிஷ்கெக்கில் அதிபர் மசூத் பெஷேஷ்கியனைச் சந்தித்தேன். பல்வேறு துறைகளில் ஈரானுடனான இந்தியாவின் நீண்டகால நட்பை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். இந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். நீடித்த அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஈரான் அமெரிக்கா இடையேயான ராணுவத்தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்-ஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பேசுபொருளாகியிருக்கிறது.

Bootstrap