சீனாவின் நடவடிக்கைகளில் அதிகரித்து வரும் கணிக்க முடியாத தன்மையும், தைவான் மீதான ராணுவ அச்சுறுத்தலும் தீவிரமடைந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் வருடாந்திர ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.
தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் தனது கட்டுப்பாட்டை சீனா படிப்படியாக இறுக்கி வருவதாக தைவான் தெரிவித்துள்ளது.
தைவானின் வெளிநாட்டுப் போக்குவரத்து வழிகளைத் துண்டிக்கவும், ஆரம்பக் கட்ட மோதல்களிலேயே அதன் கட்டளை மற்றும் வான் பாதுகாப்பு வலைப்பின்னல்களைச் செயலிலக்கச் செய்யவும் சீனா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும், தற்போது தைவான் மீது முழு அளவிலான நிலவழித் தாக்குதல் (amphibious assault) நடத்தும் உடனடித் திறன் சீனாவிடம் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சீனத் தலைமைத்துவத்தின் முடிவு எடுக்கும் திறனில் கணிக்க முடியாத தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
சீன ராணுவத்தில் உயமட்ட அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட 'முன்னெப்போதும் இல்லாத பணி நீக்கங்களே' (purge) இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர்களில் இருந்து சீனா புதிய ராணுவப் பாடங்களைக் கற்றுக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உக்ரைன் போரில் குறைந்த செலவிலான டிரோன்கள் (drones) உருவாக்கும் முறைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா எதிர்கொண்ட சவால்களைச் சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
விரைவான ஆயுத நுகர்வு, வான் பாதுகாப்புத் தடை அமைப்புகளின் மீதான அழுத்தம் மற்றும் தொழில்துறைப் பொருள் திரட்டல் உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சவால்களைச் சீனா ஆய்வு செய்து வருவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.