சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவுகளைபலப்படுத்த உறுதி

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்

சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் சூழலில், இரண்டு நாடுகளுக்குடையேயான மூலோபாயக் கூட்டணி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்திற்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும், பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான உறவுகள் மேலும் உறுதியடைந்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டார்.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்குடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக புடின் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இதில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துவான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த புடின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது யுக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர தில்லி தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

Bootstrap