நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர், சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABC News Australia உள்ளிட்ட ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. அவர்கள் Himalayan Glacier Adventures ஏற்பாடு செய்திருந்த கைலாஷ் யாத்திரைக் குழுவில் பயணித்ததாக ABC தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காலை உணவுக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் உள்ள குடிவரவு சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது தொடர்பு இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரன் முரளிதரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என Jaffna Monitor செய்தி வெளியிட்டுள்ளது. குடும்பத்தினர் நால்வரும் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, The Guardian, The Australian, Daily Telegraph மற்றும் News. com.au உள்ளிட்ட ஊடகங்களும் சிட்னியைச் சேர்ந்த முரளிதரன் குடும்பம் நேபாள வெள்ளத்தில் காணாமல் போனதாக செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
சந்திரசேகரன் முரளிதரன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். அவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றதுடன், புவிசார் பொறியியல் துறையில் Chartered Professional Engineer ஆகப் பணியாற்றி வருகிறார். மேலும், Foundation Earth Sciences நிறுவனத்துடன் அவர் தொடர்புடையவர் என தொழில்முறைத் தகவல்களை சமூகவலைத்தளங்களில் பகிர்வதை காணமுடிகிறது.