மெஸ்ஸி என்னும் மாயாஜால கால்பந்தாட்டக்காரனின் பயணம் ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் இல்லை ஒவ்வொரு சக மனிதனுக்கும் உத்வேகம் கொடுக்கக்கூடிய பயணமாகும்.. உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர் சேகுவாரா மற்றும் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பிறந்த அர்ஜென்டினா நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். அந்த அணியில் மாரடோனாவின் பத்தாம் எண் ஜெர்சியை அணிந்து, அவரது வாரிசாகவே கால்பந்து உலகில் களம்கண்ட மெஸ்ஸிக்கு சர்வதேச பயணம் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை.. ஒரு மிகப்பெரிய லெகஸியை சுமக்க வேண்டிய பாரம் மெஸ்ஸிக்கு தாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது.
தன்னுடைய பதினோரு வயதில் ‘ஜி. ஹெச்.டி’ எனும் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்ஸி, இனி நாலடிக்கு மேல் வளரமாட்டார் என மருத்துவர்கள் கணித்தனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால், மருத்துவச் செலவைக் குறைக்கத் தனக்குத்தானே ஊசி செலுத்திக்கொள்ளும் கடினமான நிலைக்கு ஆளானார் மெஸ்ஸி. அதுமட்டுமில்லாமல் சக வீரர்களால் ‘புல்கா’ அதாவது ’குள்ளன்’ என்ற கேலிக்கும் ஆளானார். இவரெல்லாம் எங்கே தேறப்போகிறார் என்ற விமர்சனங்களை உடைத்து, உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பலூன் டி’ஓர்’ விருதை எட்டு முறை வென்றதுடன், அவரது மருத்துவச் செலவுகளை ஏற்ற பார்சிலோனா அணிக்கு 672 கோல்களை அடித்து, 35 கோப்பைகளையும் வென்றுகொடுத்து நன்றிக்கடனை செலுத்தினார். அதுமட்டுமில்லாமல் 2012ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் 91 கோல்கள் அடித்து கின்னஸ் சாதனை படைத்த மெஸ்ஸி, கால்பந்தாட்ட வரலாற்றிலேயே அதிகமாக நாட்டுக்காகவும் தான் பங்கேற்ற அணிக்காகவும் 47 வெற்றிக் கோப்பைகளை வென்றுகொடுத்து தலைசிறந்த கால்பந்தாட்ட வீரனாக உருமாறினார்.
இதுபோன்ற ஒரு கால்பந்தாட்ட வீரன் 100 வருடங்களுக்கு ஒருமுறை தான் கிடைப்பான் என புகழப்பட்டாலும், உலகக்கோப்பையானது மெஸ்ஸிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. தன்னுடைய குரு மரடோனாவுடன் சேர்ந்து 2014 கால்பந்து உலகக்கோப்பையை வெல்ல புறப்பட்ட மெஸ்ஸிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றதுடன், 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியிலும் அர்ஜெண்டினா படுதோல்வியை சந்தித்தபிறகு விரக்தியில் சர்வதேச ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி.. ஆனால் காலம் மெஸ்ஸியை அவ்வளவு எளிதாக விடவில்லை. மீண்டும் களத்திற்கு திரும்பிய மெஸ்ஸி 17 ஆண்டுகளுக்கு பிறகு 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்று தன் தாகத்தை தீர்த்துக்கொண்டார். இல்லை மெஸ்ஸியின் கைகளில் தவழமுடியாமல் இருந்த உலகக்கோப்பை தன் தாகத்தை தீர்த்துக்கொண்டது.. அதற்குபின் பல உலகசாதனைகளை நிகழ்த்திக்காட்டினார் மெஸ்ஸி..
சமீபத்தில் நடைபெற்ற 2026 உலகக்கோப்பையிலும் தன் அணியை தனியாளாக இறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்ற மெஸ்ஸி, இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியோடு சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய ஓய்வு குறித்து உருக்கமாக பேசியிருக்கும் மெஸ்ஸி, “இறுதிப் போட்டி முடிந்து இவ்வளவு காலம் கடந்த பின், இதைப்பற்றி நான் அதிகம் யோசித்து, தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இது உள்ளுக்குள் மிகவும் வலியை ஏற்படுத்திய ஒரு முடிவுதான், ஆனால் இதுவே சரியான தருணம் என்பதை நான் உணர்கிறேன். அணிக்காக அனைத்தையும் வென்ற கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் நான் எப்போதும் எனது முழு பங்களிப்பையே வழங்கியிருக்கிறேன்.
இனி அதிக காலம் இல்லை, பல்வேறு அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன. இது எனக்கு மிகவும் வலியைத் தரும் அத்தியாயம். தேசிய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் நேசிக்கிறேன், நேசித்தேன், எப்போதும் நேசிப்பேன். என்னிடம் இருந்த அனைத்தையும் நான் கொடுத்துவிட்டேன், இதற்கு மேல் தருவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. மேலும், தேசிய அணியில் விளையாடத் தகுதியான சிறந்த இளம் வீரர்கள் பலர் தற்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிடவேண்டிய் நேரம். இந்த 20 ஆண்டுகளில் நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. மைதானத்திற்குள் இருந்து நீங்கள் எழுப்பும் குரல்களைக் கேட்பதை நான் நிச்சயம் தவறவிடுவேன். இப்போது நான் உங்களில் ஒருவனாக மாறி, எப்போதும் வெளியில் இருந்து ஆதரவளிப்பேன்” என கூறியுள்ளார்.
2005 ஆகஸ்ட் 17 அன்று ஹங்கேரிக்கு எதிரான நட்புரீதியான போட்டியில் தனது 18வது வயதில் அறிமுகமானதில் இருந்தே அர்ஜென்டினா தேசிய அணியின் முகமாகவும், நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர் லியோனல் மெஸ்ஸி. பல தலைசிறந்த கோல்களையும், மேஜிக் மொமண்ட்களையும் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி ஜாம்பவான் மெஸ்ஸி!