கனடாவின் மரின்லேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவிலிருந்து மீதமிருந்த கடைசி திமிங்கிலங்களும் டால்பின்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

கனடாவின் நயாகரா வீழ்ச்சிப் பகுதியில் உள்ள மரின்லேண்ட் (Marineland) பொழுதுபோக்குப் பூங்காவிலிருந்து மீதமிருந்த கடைசி திமிங்கிலங்களும் டால்பின்களும் வெளியேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் கனடாவில் விலங்குகளைக் கூண்டில் அடைத்து வளர்க்கும் முறை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று, கடைசி 6 வெள்ளைத் திமிங்கிலங்கள் (Beluga whales) சிறப்புப் போக்குவரத்து லாரிகளில் ஏற்றப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஷிகாகோ ஷெட் அக்வாரியம் (Shedd Aquarium) மற்றும் சான் அன்டோனியோ சீவேர்ல்ட் (SeaWorld San Antonio) போன்றவற்றுக்கு அனுப்பப்பட்டன.

கடந்த சில வாரங்களில் மரின்லேண்டில் இருந்து மொத்தம் 30 வெள்ளைத் திமிங்கிலங்கள் மற்றும் 4 டால்பின்கள் அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் உள்ள 5 வெவ்வேறு நீர்வாழ் உயிரினக் காப்பகங்களுக்கு (aquariums) மாற்றப்பட்டுள்ளன.

கனடாவில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்களைக் கூண்டில் அடைப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே அங்குள்ள விலங்குகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விலங்குகளும் மாற்றப்பட்டதால், கனடாவில் இனி எந்தவொரு திமிங்கிலமும் சிறைபிடிக்கப்படவில்லை.

கடுமையான நிதி நெருக்கடி, விலங்கு நல அமைப்புகளின் அழுத்தம் மற்றும் சீனாவிற்கு விலங்குகளை அனுப்பிய முந்தைய திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது போன்ற பல்வேறு சிக்கல்களை இந்தப் பூங்கா எதிர்கொண்டது. 2019 சட்டத்திற்குப் பிறகு இங்கு 19 வெள்ளைத் திமிங்கிலங்கள், ஒரு கொலையாளி திமிங்கிலம் மற்றும் ஒரு டால்பின் உயிரிழந்தன. மேலும், சமீபத்தில் சிகாகோவிற்கு மாற்றப்பட்ட 'பீகாச்சு' (Peekachu) என்ற திமிங்கிலம் கடுமையான நீரிழப்பு காரணமாக சில நாட்களிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Bootstrap