காஸா முனையில் கடுமையான சுகாதார நெருக்கடி: மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை

காஸா முனையில் நிலவும் கடுமையான பொது சுகாதார நெருக்கடியானது, குளிர்காலம் மற்றும் குளிர்கால மழையின்போது மேலும் மோசமடையும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, காஸாவில் நீரின் தரம் கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், வயிற்றுப்போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச அளவிலான தண்ணீரைக் கூட வழங்கத் தவறியுள்ள சூழ்நிலையில், நீரின் தரம் மற்றும் நீர் மாசுபடுதல் ஆகியவை பெரும் பிரச்சினையாகத் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.

குளிர்கால மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, கழிவுநீரை மக்கள் தூங்கும், சமைக்கும் இடங்களுக்குக் கொண்டு சேர்த்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 6,700 நீர் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபடுதல் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஜனவரியில் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த மாசுபடுதல், ஆகஸ்ட் மாதத்தில் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதத்திற்குப் பிறகு கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்புகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

இருப்பினும், ஒரு பெரும் சுகாதாரப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இன்னும் காலம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர், மனிதாபிமான உதவிகள் எந்தவிதத் தடையுமின்றி உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap