இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய, இன்று (02) முதல் நாளை (03) வரை, அவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராயவுள்ளார்.
வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவலின்படி, அமைச்சர் ஹேரத் நாளை டுபாயில் நடைபெறவுள்ள “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், அவர் UAE வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி பின் அஹ்மத் அல் ஸெயூதியுடன் இணைந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.