ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட சுமார் 100 இலக்குகள் மீது அமெரிக்க இராணுவத்தினர் நேற்று (01) இரவு அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஈரான் - அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் முறிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், செப்டம்பர் முதலாம் திகதி இரவு ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 100 இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரானிய புரட்சிகரப் படையினர் 25க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மோதல் நீடித்து வரும் நிலையிலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற 40க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.