Federal government-ஆனது'Gas Tax Holiday' திட்டத்தை 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மோதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இந்த வரியை தற்காலிகமாக நீக்கினார். இதன் மூலம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு 4 காசுகளும் இருந்த மத்திய கலால் வரி (Federal Excise Tax) செப்டம்பர் 7-ஆம் தேதி (Labour Day) வரை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தத் தற்காலிக விலக்கே தற்போது 2027-ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

 விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் வகையில், நிதி அமைச்சர் ஃபிராங்குவா-ஃபிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne) இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒட்டாவாவில் வெளியிடவுள்ளார்.

இந்த வரிச் சலுகை நீட்டிக்கப்படுவதை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயிலியெவ் (Pierre Poilievre), இது ஒரு பகுதி அளவிலான நிவாரணம் மட்டுமே என்றும், ஜி.எஸ்.டி (GST) உள்ளிட்ட அனைத்து மத்திய வரிகளையும் 2027 ஜூலை 1 வரை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 என்.டி.பி தலைவர் அவீ லூயிஸ் (Avi Lewis) இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது எண்ணெய் நிறுவனங்களுக்கு செய்யும் "கார்ப்பரேட் நலத் திட்டம்" என்று சாடியுள்ள அவர், பொதுமக்களின் வரிப் பணத்தை வழங்குவதற்குப் பதிலாக, அதிக லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் மீது சிறப்பு வரிகளை (Windfall Tax) விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Bootstrap