ஆம்பர் அலர்ட் (Amber Alert) எனப்படும் அவசரகால எச்சரிக்கை முறை தற்போது சிறார்களின் கடத்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வயது வரம்பின்றி அனைத்து வகையான கடத்தல்களுக்கும் இந்த முறையை விரிவுபடுத்த வேண்டும் என்று கியூபெக் மாகாணத்தின் மரண விசாரணை அதிகாரி (Coroner) பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 2024 அக்டோபரில், கியூபெக்கின் மான்ட்ரியல் நகரைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி லூசியா அர்குரி (Lucia Arcuri), மனநலம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்ட தனது 59 வயது மகன் ஜியுசெப்பே அர்குரியால் (Giuseppe Arcuri) கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். 24 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் தேடிய நிலையில், தாயும் மகனும் ஒரு காரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
அந்த மூதாட்டி காணாமல்போன முதல் 24 மணி நேரத்தில் உயிரோடுதான் இருந்திருக்கக்கூடும் என்றும், தற்போது சிறார்களுக்கு வழங்கப்படுவதைப் போல வயது வந்தோருக்கும் இந்த ஆம்பர் அலர்ட் முறை நடைமுறையில் இருந்திருந்தால், அவளுடைய உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று மரண விசாரணை அதிகாரி டேவ் கிம்ப்டன் (Dave Kimpton) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரின் செல்போன்களிலும் ஒலிக்கச் செய்யும் இந்த எச்சரிக்கை முறை, பொதுமக்களைக் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படச் செய்து (Force multiplier) குற்றங்களைத் தடுத்திட உதவும் என இத்துறையின் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
இத்தகைய அவசரகால எச்சரிக்கைகள் அடிக்கடி கொடுக்கப்பட்டால் பொதுமக்களுக்கு "அலர்ட் சோர்வு" (Alert fatigue) ஏற்பட்டு, கடுமையான வானிலை எச்சரிக்கைகள் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற மிக முக்கிய எச்சரிக்கைகளைக் கூட மக்கள் புறக்கணிக்கக்கூடும் என்று குற்றவியல் நீதித்துறைப் பேராசிரியரான திமோதி கிரிபின் (Timothy Griffin) எச்சரிக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பரிசீலிப்பதாகக் கியூபெக் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.