எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காக, முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி நேற்று (01) நல்லூரில் ஆரம்பமானது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் தூய்மையாகக் காணப்பட்டதாகவும், மக்கள் கிணற்று நீரை நேரடியாகப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், குழாய்க் கிணறுகளின் கட்டுப்பாடற்ற பயன்பாடு, முறையற்ற முறையில் அதிகளவில் கிணறுகள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலத்தல் உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீரின் தரமும் அளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், குழாய்க் கிணறுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் முறையான கண்காணிப்பு பொறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன் கழிவுநீர் மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, செப்டெம்பர் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் நீரியல் ஆய்வுகள், நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்கள், குளங்கள் மற்றும் ஆறுகளை முறையாகப் பராமரிப்பது தொடர்பான தகவல்கள், மாதிரிகள், பதாகைகள் மற்றும் ஆய்வுத் தரவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.