குற்ற ஒப்புதல் அளித்தார் டைகர் வுட்ஸ்; ஓட்டுநர் உரிமம் 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வீதி விபத்துத் தொடர்பில், பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் 'கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் செலுத்தியமை' தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

மார்ட்டின் கவுண்டி நீதிமன்றத்தில் முன்னிலையான 50 வயதான டைகர் வுட்ஸ், 'போதையில் வாகனம் செலுத்தியமை' என்ற ஆரம்பக் குற்றச்சாட்டுக்கு பதிலாகக் குறைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டினைக் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு இடைநிறுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜூபிட்டர் தீவில் உள்ள வீதியொன்றில் டைகர் வுட்ஸ் செலுத்திச் சென்ற வாகனம், பாரவூர்தி ஒன்றின் மீது மோதி வீதியின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், அவர் போதை நிலையில் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும், அவரது சட்டப்பையில் இரண்டு வலி நிவாரண மாத்திரைகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது மதுபோதை பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும், அவர் சிறுநீர் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்.

தான் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே வானொலி அலைவரிசையை மாற்ற முயன்றபோதே இந்த விபத்து நேரிட்டதாக அவர் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது டைகர் வுட்ஸ் உடன் அவரது காதலியான வெனேசா ட்ரம்ப் (டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனின் முன்னாள் மனைவி) நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

சிகிச்சைக்குப் பின் அமெரிக்கா திரும்பியுள்ள டைகர் வுட்ஸ், மீண்டும் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றபோதிலும், பி.ஜி.ஏ டூர் அமைப்பின் எதிர்காலப் போட்டிகளுக்கான குழுவின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap