சீன ஜனாதிபதி எகிப்து பயணம்

மேற்காசிய பிராந்தியத்தில் தனது அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி சீ சின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கெய்ரோவில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசியை சந்தித்த சீ சின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சர்வதேச அரங்கில் ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணைந்து செயல்பட வேண்டும் என சீ சின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தாய்வான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை நிலைப்பாட்டுக்கு எகிப்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜனாதிபதி எல்-சிசி உறுதியளித்துள்ளார்.

மேற்காசியாவில் நிலவும் பதற்றங்களால் ஹோர்முஸ் நீரிணை வழியான சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் சூயஸ் கால்வாயின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் எகிப்துடனான உறவை மேலும் வலுப்படுத்த சீனா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap