வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 11 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொத்தம் 227 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில், ஏனையவர்களுக்கு 18 மாதங்கள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில், பிரான்சிலிருந்து வியட்நாமுக்கு போதைப்பொருட்களை கடத்த ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் வலையமைப்பின் முக்கிய நபரான ஹா டான் நாம் என்பவரும் அடங்குகிறார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கு ஆரம்பமானது. பெரிஸிலிருந்து ஹோ சி மின் நகருக்கு வந்த நான்கு வியட்நாம் விமானப் பணிப்பெண்கள், 157 பற்பசைக் குழாய்களில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை மறைத்து கொண்டு வந்த சம்பவம் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
எனினும், குறித்த விமானப் பணிப்பெண்கள் போதைப்பொருட்கள் இருப்பதை அறியாமல் அவற்றை எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்ததால், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போதைப்பொருட்கள் உணவுப் பொருட்கள், சலவைத்தூள், வாய் கொப்பளிக்கும் திரவம் மற்றும் காபி உள்ளிட்ட பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு, பிரான்சிலிருந்து வியட்நாமுக்கு கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நாடுகடந்த கடத்தல் வலையமைப்பின் பரிவர்த்தனைகளின் மொத்த பெறுமதி சுமார் 29 டிரில்லியன் வியட்நாமிய டாங் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் சுமார் 20 பேருக்கு போதைப்பொருட்களை சட்டவிரோதமாக வாங்குதல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல் மற்றும் கடத்தலை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஆறு குற்றங்களுக்கான மரண தண்டனையை நீக்குவதற்கு வியட்நாம் அரசு கடந்த மாதம் முன்மொழிந்திருந்த போதிலும், அந்த மாற்றங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.