நியூயோர்க் பாடசாலை மாணவர்கள் ஏஐ பயன்படுத்த தடை!

நியூயோர்க் நகரப் பாடசாலைகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் சுயமாக சிந்திக்கும் திறன், தனித்திறன்கள் மற்றும் மனநலனில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை அடுத்த ஓராண்டுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 9ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவு செயலிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பாடத் தயாரிப்பு உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவு செயலிகளைப் பயன்படுத்துவதற்கு விதிகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறைகளில் திரையைப் பார்ப்பதற்கான நேரத்தை 45 நிமிடங்களாகவும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 30 நிமிடங்களாகவும் மட்டுப்படுத்த நியூயோர்க் கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகள் ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் நேரடியாக தொடர்புகொண்டு கற்றுக்கொள்வதுடன், சிக்கல்களைத் தாங்களாகவே எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மேயர் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில், அடுத்த ஓராண்டில் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bootstrap