மாறாயிலுப்பை, புதுக்குளம் வயல்காணிகளை விடுவிக்க ரவிகரன் வலியுறுத்தல்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாறாயிலுப்பை கமக்கார அமைப்புப் பிரிவிலுள்ள புதுக்குளத்தின் கீழ் 14 விவசாயிகளுக்குச் சொந்தமான 52 ஏக்கர் பூர்வீக வயல்காணிகள் வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை இழந்த நிலையில், தற்போது அவற்றை காண்பிக்குமாறு கோருவது நியாயமற்றது எனவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த காணிகளுக்குப் பதிலாக வேறு இடங்களில் மாற்றுக்காணிகளை வழங்கும் யோசனைக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களின் பூர்வீகக் காணிகளை அவர்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாறாயிலுப்பை மற்றும் புதுக்குளம் வயல்காணிகளை மாவட்ட செயலாளர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நேற்று (04) நடைபெற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Bootstrap