வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 36ஆவது நினைவேந்தல்

1990ஆம் ஆண்டு யுத்த சூழலில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் 158 பேரின் 36ஆவது நினைவேந்தல் சனிக்கிழமை (05) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவாகச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்.

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களில் 158 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, கொம்மாதுறை, செங்கலடி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அக்கால யுத்த சூழலில் பாதுகாப்புக்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (05) அதிகாலை பல்கலைக்கழக அகதி முகாம் சுற்றிவளைக்கப்பட்டு, குறிப்பிட்ட வயதுடைய ஆண்கள் பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூட்டப்பட்டதாகவும், அவர்களில் பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நினைவுகூரும் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் 36 ஆண்டுகளாகியும் உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், உறவினர்கள் தொடர்ந்தும் தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளிலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap