பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக முப்படைகளையும் ஒரே அதிகாரியின் கீழ் கொண்டு வரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நிறைவேற்றிய சட்டம் மூலம் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ஏற்கனவே இருந்து வந்த அமோக செல்வாக்கு அதிகாரப்பூர்வமாக அவரது கைக்கு வந்துள்ளது. சர்வதேச நாடுகளின் செல்லப் பிள்ளையாக திகழும் அசிம் முனீருக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரிஃப்பைவிட அதிக முக்கியத்துவம் தருகிறார். 2025ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, ட்ரம்ப்புடன் அவருக்கு இருந்த உறவு வழக்கத்துக்கு மாறாக மிகவும் நெருக்கமானது. அப்போது வெள்ளை மாளிகையில் முனீருக்கு டரம்ப் விருந்து அளித்து கவுரவித்தார். ஈரான், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளோடு அசிம் முனீர் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் ராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அசிம் முனீர் தொடர்ந்து கோலோச்சி வருகிறார். ஆகஸ்ட் மாத இறுதியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2026ஆம் ஆண்டின் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் சட்டம், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி என்ற புதிய பதவியை அதிகாரப்பூர்வமாக உருவாக்க வகை செய்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருக்கும் அசிம் முனீர், நாட்டின் முதலாவது 'சி.டி.எஃப்' ஆக பொறுப்பேற்றுள்ளார் என பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத் தலைமை கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. அரசுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் புதிய பதவி மூலம், முப்படைகளின் மீதும் சட்டப்பூர்வமான மற்றும் நடைமுறை ரீதியான தீர்மானங்களைச் செயல்படுத்தும் முழு அதிகாரம் அசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை பாதிக்கும் அதிகமான காலம் ராணுவ தளபதிகளே நேரடி ஆட்சியாளர்களாக நாட்டை நிர்வகித்துள்ளனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், எந்தப் பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முக்கியப் பங்கு வகிக்கிறது.