பாட்டுப்போட்டியில் பங்கேற்க சென்னை வந்த கனடா நாட்டு பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி, நிர்வாண பூஜை நடத்தி பணம் பறித்ததுடன், மிரட்டல் விடுத்த கிளி ஜோசியரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட 37 வயது பெண் ஒருவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ள சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
அப்போது அவர், பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கு கிளி ஜோசியம் பார்த்து வந்த தென்காசியைச் சேர்ந்த இசக்கி முத்து (48) என்பவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார்.
அவர் அந்தப் பெண்ணின் கடந்த கால வாழ்க்கையை சரியாகக் கணித்துக் கூறியதால், ஜோசியர் மீது அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதற்காக முதல்கட்டமாக ரூ.20 ஆயிரம் கட்டணமாகக் கொடுத்துள்ளார்.
இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜோசியர், பரிகார பூஜைகள் செய்தால் வாழ்க்கையில் மேலும் உயரலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தோஷம் நீங்க நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.
அதை நம்பிய அந்தப் பெண், தனது தங்கும் அறையில் இருந்தவாறே நிர்வாண பூஜை செய்ய, அதை ஜோசியர் தனது செல்போன் வீடியோ காலில் கண்டுகளித்துள்ளார்.
இதற்கு கட்டணமாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றுக்கொண்டார். இதற்கிடையே கனடா திரும்பிய அந்தப் பெண், மீண்டும் தொலைக்காட்சி அழைப்பின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
தகவல் அறிந்த ஜோசியர், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, “பூஜை செய்ய வேண்டும், உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பு” எனக் கேட்டு பெற்றுள்ளார்.
பின்னர், தனக்கு ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், தங்கும் அறைக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தென்காசி சென்று கிளி ஜோசியர் இசக்கி முத்துவை 20.09.2026 இரவு கைது செய்தனர்.