செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல்.

12ஆம் திகதி அநுராதபுரத்தில்  மாபெரும் கூட்டம் ஒன்றை பொதுஜன பெரமுன நடத்தவிருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

12ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பகிரங்கமாக சபையில் வைத்து நாமல் ஆற்றுவார்.

தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல.

எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி முற்றிலும் பொய்யானது. அவை ஆதாரமற்றவை.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச ஆற்றவுள்ள உரையை சரியாக செவிமடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap